29/09/2016
உலகின் மிகப்பெரிய 'பயோமெட்ரிக்' அடையாள திட்டம் 'ஆதார்'!
உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள திட்டம் என்று மத்திய அரசு பெருமிதப்படும் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை எதிர்த்து கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசுவாமி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர் அடங்கிய அமர்வு, ஆதார் அடையாள திட்டத்தை கட்டாயமாக்கக்கூடாது என்று அறிவுறுத்தியது. இதன் மூலம் தனிமனித உரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பிலும் செபி, டிராய், ரிசர்வ் வங்கி சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசின் சமூக நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்க்கவே ஆதார் கட்டாயமாக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு 2015 அக்டோபர் 15 ஆம் தேதி ஐந்து நபர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போதும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று கூறிய அமர்வு, மக்கள் விரும்பினால், வங்கிக்கணக்கு, 100 நாள் வேலைத்திட்டம், முதியோர் ஓய்வூதியத்திட்டம், வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது.
அதேபோல மக்கள் விரும்பினால் சமையல் எரிவாயு, ரேஷன் திட்டங்களை ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. அப்போது ஏழை எளிய மக்களுக்கு அரசின் சமூக திட்டங்கள் சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த சூழலில் கடந்த 15 ஆம் தேதி மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டுவந்து புதிய சட்டவிதிமுறைகளை பயன்படுத்தி ஆதாரை கட்டாயமாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் ஆதார் திட்டத்தில் 105 கோடி பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கிறார் ஆதார் திட்ட ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும், மானியம் மற்றும் உதவித்தொகை பெற ஆதார் திட்டத்தில் இணைய வேண்டும் என்றும், இத்திட்டத்தில் இணையாதவர்கள் அதற்காக உள்ள மையங்களுக்குச்சென்று விண்ணப்பித்து பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக ஆதார் திட்ட வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 84 புள்ளி 99 சதவிகிதம் பேர் ஆதார் திட்டத்தில் இணைந்துள்ளனர். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 93 சதவிகிதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 78 புள்ளி 88 சதவிகிதம் பேரும் ஆதார் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
தற்போது ரேஷன் கார்டுக்கு கட்டாயம், அரசு நலத்திட்டங்கள் பெற கட்டாயம், மானியம் பெற கட்டாயம் என அத்யாவசியங்களுக்கு ஆதார் எண் கேட்கப்படுவதால் இத்திட்டத்தில் சேரும் முனைப்பு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆதார் பெறும் மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
பதிவு செய்த நாள் : September 28, 2016 - 10:27 PM
மாற்றம் செய்த நாள் : September 28, 2016 - 10:30 PM
நன்றி புதிய தலைமுறை